செவ்வரத்தம் பூ சலட்/ சம்பல் (சைவம்)

யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது செவ்வரத்தம் பூச் சம்பல் செய்து சாப்பிடுவோம். அது மிகவும் நல்ல உருசியாக இருக்கும். அவுஸ்திரேலியாவில் எங்கே இப்படிச் செய்து சாப்பிட முடியும் என ஏக்கமாக இருந்தது. ஏனென்றால் செவ்வரத்தம் பூவிற்கு எங்கே போவது?. ஆனால், இது குயின்ஸ்லாந்து மாநிலத்தில் எப்பவுமே கிடக்கிறது. கிடைச்சா சும்மா இருக்க முடியுமா?, உடனே ஒரு சம்பல் செய்து சாப்பிட்ட பின்னர்தான் மிச்ச வேலை.
செவ்வரத்தம் பூ (
Hibiscus flower ) சத்துள்ள, மருத்துவ குணமுள்ள, சாப்பிடக் கூடிய பூ. தமிழகத்தில் இதனை செம்பருத்தி பூ என்பர். இந்தப் பூவை குளிர் பானம், சம்பல், சலட், குழம்பு என பலவகையிலும் பயன்படுத்தலாம்.

செவ்வரத்தம் பூ சலட்

தேவையான பொருட்கள்

செவ்வரத்தம் பூ 20
சிவப்பு வெங்காயம் (salad onion) 1
வெட்டிய புதினா இலை 1கப்
பச்சை மிளகாய் 1
எலுமிச்சம்பழம் பாதி
தேவையான அளவு உப்பு

செய்முறை















செவ்வரத்தம் பூவைச் சுத்தம் செய்து சின்னஞ் சிறிதாக வெட்டவும்.
சிவப்பு வெங்காயம் (salad onion) ,பச்சை மிளகாய் என்பவற்றையும் வெட்டயவுடன், வெட்டிய புதினா இலை, செவ்வரத்தம் பூவையும் உப்பையும் மரக் கரண்டியால் கலந்து வைக்கவும். சாப்பிடத் தயாரனவுடன் எலுமிச்சம்பழப் புளியையும் விட்டு கிளறிவிடவும்.

இந்த சலட் பாணுடன் "சான்விச" மாதிரி செய்து சாப்பிடலாம். ரொட்டிக்குள் வைத்து "சலட் றப்"(salad wrap) போலச் செய்தும் சாப்பிடலாம்.

சோறு, புட்டுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்
வெங்காயம் பிடிக்காதவர்கள் "சுக்கினி" (zucchini)யை துருவலாக்கிச் சேர்க்கலாம்.

சம்பல் செய்யும் முறை:

1/2 கப் தேங்காய்ப் பூவை கூட்டாக அரைத்து இந்த சலட்டுடன் சேர்த்தால் செவ்வரத்தம் பூச் சம்பல் ஆகிவிடும்.

எல்லாம் சரி, பூவுக்கு எங்க போறதுன்னு யாரோ பேசற மாதிரி கேட்கிறது.
வந்ததுதான் வந்தோம் வெளி்நாட்டுக்கு, குளி்ர்நாடுகளில இது குதிரைக் கொம்பாவல்ல இருக்குது.
இதுக்காகவாவது ஒரு தடவை குயின்ஸ்லாந்து வந்திட்டுப் போலாமே!

_செல்லி____________________________________________________________________--
சரி,சரி..உங்க பதில அப்புறமா வந்து சொல்லாம இப்பவே சொல்லிட்டுப் போங்க. நன்றி
.

6 comments:

வெற்றி said...

செல்லி,
நல்ல பதிவு.ஆனால் எனக்குச் சமையல் தெரியாதே! இத் தகவல்கள் எனக்குப் பயன்படுமா தெரியவில்லையே.
இப்படி செவ்வரத்தம் பூவில் செய்யும் சாப்பாடு ஒன்றும் நான் இதுவரை சாப்பிட்டதில்லையே! பூவிலும் சம்பல்/சலாட் எல்லாம் செய்யலாமா?

Vasanthan said...

செவ்வரத்தனம் பூ - செம்பருத்திப்பூ, ரெண்டுமே ஒண்டுதானா?

முந்தியுமொருக்கா ஓராள் இப்பிடிச் சொன்னவ எண்டது ஞாபகம் வருது.

செல்லி said...

வெற்றி said...
//பூவிலும் சம்பல்/சலாட் எல்லாம் செய்யலாமா?//
ஒமோம், ஊரில எங்கட வீட்டை நிறைய செவ்வரத்தை மரம் நிண்டது.காலமையில எல்லாப் பூவையும் பறிக்கிறதான் என்ர வேலை. இஞ்சியும் செர்த்து அம்மா போடுவா ஒரு சம்பல், அதல்லோ சம்பல்!

கனடாவில இந்தப்பூக் கிடைக்குமா?
ஆனா மாதகலில கிடைக்கும்.
நன்றி வெற்றி.

செல்லி said...

வசந்தன்
hibiscus என்றால் செவ்வரத்தம் பூ.இந்த வலைப் பக்கத்திஅப் பாருங்கள். ஊர்ச் செவ்வரத்தம் பூ தெரியும். இதைத்தான் தமிழகத்தில் செம்பருத்தி என்கிறார்கள். இதற்கு ஆதாரம் தேடி எடுத்து தருகிறேன்.
நன்றி
www.naturalcosmeticsupplies.com/gifs/hibiscus.jpg

தி. ரா. ச.(T.R.C.) said...

அட பூவிலும் சம்பலா. அதிசயம்தான்.எங்கள் வீட்டில் இதை ஈஸ்வரிக்கு மாலையாகச் சூடுவோம்.தேங்காய் எண்ணையில் போட்டு தலைக்கு எண்ணை காய்ச்சுவோம் அவ்வளவுதான். சரி இனிமேல் சம்பல் செய்து பார்ப்போம்.நன்றி தகவலுக்கு.சம்பல் என்ற புதிய தமிழ் வார்த்தைக்கும்.

செல்லி said...

தி.ரா.ச
//தேங்காய் எண்ணையில் போட்டு தலைக்கு எண்ணை காய்ச்சுவோம்//
அந்த எண்ணெயை தலைக்கு வைத்தால் பேன் வராதாம்.
யாழ்ப்பாணத்தில் தேங்காய்ப் பூ, மிளகாய் உப்பு சேர்தத எதையும் சம்பல் அல்லது பச்சடி என்கிறோம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, ஐயா.